[email protected]
feddral bank
BREAKING NEWS

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் லண்டனில் இருந்து டாக்டர் வருகை

பதிவு செய்த நாள்: 13 Oct 2016 2:01 pm
By :

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த 22-ந்தேதி இரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் அன்று இரவே காய்ச்சல் குணப்படுத்தப்பட்டது.

ஆனால் சளி தொந்தரவு, மூச்சு விடுவதில் சிரமம், நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டனர். பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

அவருக்கு ஆன்டிபயாடிக் சுவாச உதவி மற்றும் அதனுடன் தொடர்புடைய முழுமையான மருத்துவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், மூச்சு விடுதல் தொடர்பான நிபுணர்கள், தொற்று கிருமி நோய் சிகிச்சை நிபுணர்கள், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் கொண்ட டாக்டர்கள் குழுவினர் ஜெயலலிதாவின் உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் அறிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே லண்டனில் இருந்து சர்வதேச மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து விட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாடு திரும்பினார்.

இதே போல் கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்தனர்.

இவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவுடன் இணைந்து சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு எய்ம்ஸ் டாக்டர்களும் டெல்லி புறப்பட்டு சென்றிருந்தனர்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 22-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் இன்று இரவு லண்டனில் இருந்து சென்னை வருகிறார். 5 நாட்கள் சென்னையில் தங்கி இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உள்ளார்.

இதே போல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் கில்நானி (நுரையீரல் நிபுணர்), டாக்டர் அஞ்சன் டிரிக்கா (மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர்), டாக்டர் நிதிஷ் நாயக் (இதய சிகிச்சை நிபுணர்) ஆகியோரும் இன்று மதியம் சென்னை வருகிறார்கள்.

இவர்களும் 5 நாட்கள் தங்கி இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் தினமும் ஏராளமான கட்சி தொண்டர்கள், மகளிரணியினர் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு திரள்கிறார்கள். ஜெயலலிதா நலம் பெற வேண்டி அ.தி.மு.க.வினர் பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் அப்பல்லோ முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*