[email protected]
feddral bank
BREAKING NEWS

சென்னை ஐகோர்ட் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கருணாநிதி அறிக்கை

பதிவு செய்த நாள்: 05 Oct 2016 10:22 am

உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான சுழற்சிமுறை இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அந்த வழக்கில் கடந்த மாதம் 28-ம் தேதியன்று விசாரணை நடைபெற்றபோதே, “தேர்தல் தேதியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துவிட்டு, மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என அறிவித்ததால், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ஆய்வு செய்யக்கூட கால அவகாசம் இல்லாத சூழல் ஏற்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்கள்.

அப்போதே நீதிபதி கிருபாகரன் “உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனு தாக்கலை அறிவித்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் நீதிபதி கிருபாகரன் அளித்த தீர்ப்பில், தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை நீதிபதி சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளார். மேலும் நீதிபதி, வேட்பாளர்களுக்கு புதிய வழிமுறைகளை வகுக்க உத்தரவிட்டார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்நோக்கம் கொண்டவை, எனவே இது தொடர்பான தேர்தல் அட்டவணைகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும், டிசம்பர் 31-ந் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 28-9-2016 அன்று நான் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் தருவது போல நீதிபதி கிருபாகரனின் தீர்ப்பு அமைந்துள்ளது.

அவசர அவசரமாக தேர்தல் தேதியை அறிவித்தது பற்றியும், எதிர்க்கட்சிகளுக்கு போதிய அவகாசம் கொடுக்காதது பற்றியும் நீதிபதி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் இவைகளை எண்ணிப் பார்க்காமல், தேர்தல் தேதியை அவசர அவசரமாக அறிவித்ததால், தமிழகம் முழுவதுமுள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, வேட்புமனு தாக்கல் செய்ய அதிக சிரமம் எடுத்துள்ளார்கள்.

தேர்தல் பணிகளையும், பிரசாரங்களையும் ஆற்றுவதற்கு அவர்களுக்கு எல்லாம் மேலும் வாய்ப்பு கிடைத்தது என்ற ஆறுதலை இந்த தீர்ப்பு நிச்சயமாக தரும் என்பதில் ஐயமில்லை. உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் பொதுவாக நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற நீதிபதி கிருபாகரன் அளித்துள்ள தீர்ப்பு பெரிதும் வழிவகுக்கும் என்ற வகையில் இந்தத் தீர்ப்பினை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.

ஆனாலும் அ.தி.மு.க. அரசோ, மாநிலத் தேர்தல் ஆணையமோ இந்த நல்ல தீர்ப்பை வரவேற்காமல், வழக்கம்போல் மேல் முறையீடு செய்தாலும் செய்யக் கூடும். என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*