[email protected]
feddral bank
BREAKING NEWS

உள்ளாட்சி தேர்தல் நிலவரம்: 8 முனை போட்டியால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது

பதிவு செய்த நாள்: 30 Sep 2016 12:08 pm
By :

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 17, 19-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி விட்டன.

சட்டமன்ற தேர்தலில் சில சிறிய கட்சிகளை மட்டுமே கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலிலும் தனியாகவே களம் காண்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றியை ருசித்த கையோடு உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் அக்கட்சி செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர் நடைபெற்ற பல்வேறு உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி வாகை சூடி இருக்கிறது. இதனால் அ.தி.மு.க.வுக்கு உள்ளாட்சி தேர்தல் களம் சாதகமாகவே இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் மயிரிழையில் வெற்றியை கோட்டைவிட்ட தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும் என்கிற எண்ணத்துடன் பணியாற்றி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு அதிக இடங்கள் (41 தொகுதிகள்) ஒதுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு குறைவான இடங்களையே தி.மு.க. ஒதுக்கி இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆகிய கட்சிகளுக்கும் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் புதிதாக வந்து சேர்ந்த ஈஸ்வரன் தலைமையிலான கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் இடங்களை கைப்பற்ற முடியும் என்று அக்கட்சி கணித்துள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ள மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க.வும், த.மா.கா.வும் தேர்தலை சந்தித்தன. ஓரளவுக்காவது வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

இதனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் மக்கள் நலக்கூட்டணிக்கு முழுக்கு போட்டனர். இதனால் அக்கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் உடைந்தது.

விஜயகாந்தும், ஜி.கே.வாசனும் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறார்கள். இந்த 2 கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு இருந்த பலம் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும், அக்கூட்டணி தலைவர்கள் உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் எப்படியும் வெற்றி பெற்று சாதித்து காட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து தனித்து களம் கண்ட பா.ம.க. உள்ளாட்சி தேர்தலிலும் தனித்தே போட்டியிடுகிறது.

வடமாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் பா.ம.க. அந்த இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டங்களில் தங்களுக்கு சாதகமான பகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் பா.ஜனதாவினர் பணியாற்றி வருகிறார்கள்.

காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற ஜி.கே.வாசன், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அது கை கூடாமல் போனதாலேயே மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதற்கு வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது பலன் அளிக்காமல் போனதால் தனித்து களம் காண வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. வாசனின் இந்த தனிமை பயணம், அக்கட்சிக்கு பயனுள்ளதாக இருக்குமா? என்பது தெரியவில்லை.

சட்டமன்ற தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது. உள்ளாட்சி தேர்தலையும் அக்கட்சி தனியாகவே சந்திக்கிறது.

நாம் தமிழர் கட்சியில் இளைஞர்கள் பலர் தீவிரமான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதனை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று சீமான் கணக்கு போட்டுள்ளார்.

இதன்மூலம் உள்ளாட்சி தேர்தலில் 8 முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 குதிரைகள் மட்டுமே பந்தய களத்தில் வேகத்துடன் ஓட தயாராக இருக்கின்றன.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds