[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழக உள்ளாட்சி தேர்தல்:வேட்புமனுத்தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர்கள்

பதிவு செய்த நாள்: 27 Sep 2016 3:51 pm
By :

தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17, 19-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 4748 பேர் மனு செய்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக நிறைய பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அரசியல் கட்சிகள் அடிப்படையில் இல்லாத பதவிகளுக்கு இன்று பலரும் ஆர்வமுடன் மனு கொடுத்தனர்.

அரசியல் கட்சிகளில் மற்ற அனைத்து கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டு அ.தி.மு.க. முதலாவதாக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. 12 மாநகராட்சிகளில் உள்ள 919 வார்டுகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதுபோல 31 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டுகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில 638 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் யார் தயவும் இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதால் அ.தி.மு.க. அதிரடியாக முதல் நாளே 1557 வேட்பாளர்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் இன்று மனு தாக்கல் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 12 மாநகராட்சிகளில் 919 அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு செய்தனர்.

மாவட்ட ஊராட்சிக் குழுக்களின் வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட 638 அ.தி.மு.க. வேட்பாளர்களும் இன்று வேட்புமனு பூர்த்தி செய்து கொடுத்தனர். இதனால் தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்பகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்கள் திருவிழா போல காட்சி அளித்தன.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் மண்டல பகுதி அதிகாரிகளிடம் வேட்பு மனு கொடுத்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறக்கூடாது என்பதற்காக அதிக அளவு வாகனங்களில் வராமல் முக்கிய நிர்வாகிகளுடன் மட்டும் வந்து வேட்பு மனுக்களைக் கொடுத்து சென்றனர்.

மனு தாக்கல் காரணமாக 200 வார்டுகளிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். பல வார்டுகளில் மேள-தாளம் முழங்கப்பட்டது.

விருப்ப மனுக்கள் வாங்கியது, வேட்பாளர்களை அறிவித்தது என உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் முதன்மை இடத்தில் இருக்கும் அ.தி.மு.க. தேர்தல் பிரசார பணிகளையும் முதல் கட்சியாகத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. வேட்பாளர்களில் பலர் இன்றே பிரசாரத்தைத் தொடங்கினார்கள்.

நாளை முதல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் மற்ற கட்சிகள் இப்போதுதான் யார், யாரை வேட்பாளர்களாக தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையைத் தொடங்கியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. விருப்ப மனுக்கள் பெற்றதன் அடிப்படையில் வேட்பாளர்களை அடையாளம் கண்டு தயார் நிலையில் உள்ளது.

ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இன்னமும் முழு அளவில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகாத காரணத்தால், தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் தாமதம் ஆகியுள்ளது. தனித்து போட்டியிட போவதாக அறிவித்த தே.மு.தி.க., பா.ம.க. விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றன.

மக்கள் நலக் கூட்டணியும் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளன. அதன் பிறகு 12 மாநகராட்சிகளில் எந்தெந்த கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி நிலவுகிறது என்ற விபரம் தெரியவரும்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds