feddral bank
BREAKING NEWS

சசிகலா புஷ்பா ஜாமீன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

பதிவு செய்த நாள்: 27 Sep 2016 10:23 am

நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்டோருக்கு அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட்டு, கைது நடவடிக்கைக்கு மேலும் 6 வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணும், அவருடைய சகோதரியும் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட 4 பேரும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, மதுரை ஐகோர்ட்டு கிளை கடந்த 14-ந் தேதி தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சசிகலா புஷ்பா, அவருடைய கணவர், மகன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவும், கையெழுத்து மோசடி தொடர்பாக வழக்கு பதிய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மற்றொரு மனுவும் தாக்கல் செய்து உள்ளனர்.

அதை ஏற்று சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா, வக்கீல் அபினவ் ராவ் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்கள் பழிவாங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் ராவல் தனது வாதத்தில், மனுதாரருக்கு தமிழகத்தில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என்றும், தற்போது கூட அவர் அங்குதான் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர்கள் விசாரணைக்கு சரியான முறையில் ஒத்துழைக்காததால் அவர்களை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க தேவைப்படுவதாகவும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அக்டோபர் 3 மற்றும் 7-ந் தேதிகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கூறினார்கள்.

அவரை கைது செய்ய மேலும் 6 வார காலத்துக்கு இடைக்கால தடை விதித்தனர். சசிகலா புஷ்பா தரப்பில் 4 வாரங்களுக்குள் பதில் மனுவும் தமிழக அரசு தரப்பில் 2 வாரங்களுக்குள் எதிர்பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*