[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழக உள்ளாட்சி தேர்தல்:போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 3:19 pm

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 794 பதவி இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பதவிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) காலி ஆவதால் புதிய உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

17-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 10 மாநகராட்சி, 64 நகராட்சி, 255 பேரூராட்சி, 193 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டு, 3250 ஊராட்சி ஒன்றிய வார்டு, 50,640 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 6444 கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டுப்பதிவு நடக்கும்.

இரண்டாம் கட்ட தேர்தலின்போது சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சி, 60 நகராட்சி, 273 பேரூராட்சி, 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 323 மாவட்ட ஊராட்சி வார்டு, 3221 ஊராட்சி ஒன்றிய வார்டு, 48,684 கிராம பஞ்சாயத்து வார்டு, 6080 கிராம பஞ்சாயத்துத் தலைவர்களை தேர்ந்து எடுக்க ஓட்டுப்பதிவு நடைபெறும்.

உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. அதன் பேரில் இன்றே மனு தாக்கல் தொடங்கியது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம்.

மனு தாக்கலுக்கு மொத்தம் 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று கட்சி அடிப்படை இல்லாமல் தேர்தல் நடக்கும் உள்ளாட்சி பதவிகளுக்கு நிறைய பேர் மனு தாக்கல் செய்தனர். நாளை முதல் மனு தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் விரைவில் தெரிந்து விடும். அதன் பிறகு மனு தாக்கல் விறுவிறுப்பு அடையும். அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

30-ந்தேதி மகாளய அமாவாசை தினமாகும். அன்று ஏராளமானவர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4-ந்தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். தகுதி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.

மனுக்களைத் திரும்ப பெற 6-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும்.

தேர்தல் பிரசாரத்துக்கு மிக, மிக குறைந்த கால அவகாசமே உள்ளது. வேட்பாளர்கள் சுமார் 10 நாட்களே தீவிர பிரசாரம் செய்ய இயலும். எனவே அக்டோபர் 2-வது வாரம் தமிழ்நாடு முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெறும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றில் உள்ள வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும். இந்த பதவியிடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கட்சி சின்னத்தில் களம் இறங்குவார்கள்.

கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் கட்சி அடிப்படையில் இல்லாமல் போட்டியிடுவார்கள். அவர்களுக்கு சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 17, 19-ந் தேதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் 21-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

உள்ளாட்சிகளில் வெற்றி பெறுபவர்கள் 26-ந்தேதி பதவி ஏற்பார்கள். அன்றே வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும்.

நவம்பர் மாதம் 2-ந்தேதி மேயர், துணை மேயர், நகரசபை தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். வார்டு உறுப்பினர்கள் ஓட்டு போட்டு அவர்களை தேர்வு செய்வார்கள்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds