[email protected]
feddral bank
BREAKING NEWS

சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல்

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 10:23 am
By :

தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த வக்கீல் நாரிமனுடன் மந்திரி எம்.பி. பட்டீல் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 7 நாட்களுக்கு காவிரியில் தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடக எதிர்க்கட்சிகள், விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை.

மேலும் கடந்த 23-ந் தேதி பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள 4 அணைகளில் இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த முடியாது என்பது தான், அந்த தீர்மானத்தின் மறைமுக நோக்கம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு நாளை (செவ்வாய்க் கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கும்படி பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி கர்நாடக அரசு இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாதது மற்றும் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்தும் சீராய்வு மனுவில் கர்நாடக அரசு குறிப்பிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாலும், நாளை காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற இருப்பதாலும், கர்நாடக அரசின் சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீலான நாரிமனை நேற்று மந்திரி எம்.பி. பட்டீல், தலைமை செயலாளர் அரவிந்த் ஜாதவ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பற்றியும், கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்தும் நாரிமனுடன் மந்திரி எம்.பி. பட்டீல் ஆலோசித்ததாக தெரிகிறது.

இதற்கிடையில், காவிரி பிரச்சினை குறித்து மூத்த வக்கீல் நாரிமனுடன் ஆலோசனை நடத்துவதற்காக கர்நாடக சட்ட மந்திரி டி.பி.ஜெயச்சந்திராவும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இன்று அவர், மூத்த வக்கீல் நாரிமனை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds