feddral bank
BREAKING NEWS

கோழிக்கோட்டில் பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி பேச்சு

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 9:45 am

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. நேற்று நிறைவுநாள் நிகழ்ச்சியின்போது, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது:–

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. தேர்தல் நடைமுறையில் என்ன குறைபாடு உள்ளது, பண பலத்தின் பங்கு, அரசு எந்திரத்தின் பயன்பாடு, ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்துவது, தேர்தல்களால் நாடு சந்திக்கும் சுமைகள் உள்ளிட்ட அனைத்து சீர்திருத்தங்கள் பற்றியும் விவாதிக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என்னை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டில் இதுபற்றி விவாதம் நடத்த வேண்டும்.

இந்த சீர்திருத்தங்கள், பிரதமரின் யோசனை அடிப்படையில் மட்டும் அமைவது நல்லது அல்ல. என்னென்ன நல்ல விஷயங்களை சேர்க்கலாம், என்னென்ன விஷயங்களை நீக்கலாம் என்று பார்க்க வேண்டும்.

ஆணிவேர்

கடைநிலையில் உள்ள குடிமகனின் உரிமைகளையும் எப்படி வலுப்படுத்தலாம், ஜனநாயகத்தின் ஆணிவேரை எப்படி வலுப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும். இதை நாம் செய்து விட்டால், ஆரோக்கியமான ஜனநாயகத்தை உருவாக்குவதில் பெருமளவு வெற்றி பெற்றதாக அர்த்தம்.

உடலில் ஒரு பகுதி காயம் அடைந்தால், ஒட்டுமொத்த உடம்புக்கும் வலிக்கும். அதுபோல், நாட்டின் எந்த மூலையில் உள்ள ஒரு குடிமகன் பாதிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த நாடும் வேதனைப்பட வேண்டும். யாரும் நமக்கு அன்னியர் அல்ல. நாட்டின் மேற்குப்பகுதி மட்டும் வளர்ச்சி அடைந்து, கிழக்கு பகுதி பின்தங்குவது நல்லது அல்ல. அப்படி இருந்தால், நமது இந்திய தாய் ஆரோக்கியமாக இருக்க மாட்டாள்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, வளர்ச்சிதான்.

அரசியல்வாதிகளுக்கு கெட்ட பெயர்

சுதந்திரம் பெற்ற பிறகு, அரசியல்வாதிகளுக்கு சாமானிய மக்களிடையே கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. தன் தந்தை அரசியலில் இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ள மகன் வெட்கப்படும் நிலைதான் காணப்படுகிறது. எனவே, பா.ஜனதாவினர் தங்கள் நல்ல நடத்தை மூலம் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

எல்லா கட்சியிலும் நல்லவர்கள் இருந்தபோதிலும், பா.ஜனதாவில் சற்று அதிகமாகவே உள்ளனர். ஏனென்றால், இது கொள்கை உறுதிப்பாடு கொண்ட கட்சி. நாம் கொள்கையில் சமரசம் செய்து கொண்டிருந்தால், நீண்ட காலத்துக்கு முன்பே ஆட்சியைப் பிடித்து இருப்போம்.

மதச்சார்பின்மை

மதச்சார்பின்மை என்ற சொல்லின் பொருள், தற்போது திரித்து கூறப்படுகிறது. முஸ்லிம்களை நமது சகோதரர்களாக நடத்த வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களை ஓட்டு வங்கியாக பார்க்கக்கூடாது.

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கைக்கு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2–ந் தேதி இந்தியா ஒப்புதல் அளிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அமித்ஷா

தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா பேசுகையில் கூறியதாவது:–

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. பயங்கரவாதத்தை பாரதீய ஜனதாவும், மத்திய அரசும் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பேச்சுவார்த்தை மூலம் அங்கு அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புகிறது.

ஆனால் இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது. காஷ்மீரை யாராவது பிரிக்க நினைத்தால், அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds