feddral bank
BREAKING NEWS

உரி ராணுவ முகாம் தாக்குதல் விவகாரம்: மோடி மீது மாயாவதி கடுந்தாக்கு

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 9:32 am

காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினரிடையேயும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி தவறிவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சிதலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:–

அரசு தவறிவிட்டது

உரியில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு வலிமையான பதிலடியையும், இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் ஏற்படாது என்ற உறுதியையும், பிரதமரிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இந்த தாக்குதல்கள் இனியும் நடைபெறாது என்றும், நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் உறுதியளிக்க பிரதமர் தவறிவிட்டார். இது தொடர்பாக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டது.

இத்தகைய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பான நீண்டகால கொள்கைகளை வகுப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானின் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, கல்வியறிவின்மை குறித்து அந்த நாட்டு தலைமைக்கு அறிவுரை வழங்கி, நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார், பிரதமர் மோடி.

ஆய்வு செய்ய வேண்டும்

பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு அந்த நாட்டு பிரதமருக்கு அறிவுரை வழங்குவது நல்லதுதான். அதே நேரம் தனது அரசின் செயல்பாட்டையும் அவர் ஆய்வு செய்ய வேண்டும். நாட்டில் வறுமை ஒழிப்பு, விலைவாசி குறைப்பு போன்றவற்றில் தனது செயல்பாடு மோசமாக உள்ளதை அவர் எண்ணிப்பார்த்து, மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds