feddral bank
BREAKING NEWS

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் தகர்க்கும் பணி தள்ளிவைப்பு

பதிவு செய்த நாள்: 24 Sep 2016 3:28 pm
By :

போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வந்தன. இதில் ஒரு 11 மாடி கட்டிடம் 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி இடிந்து விழுந்ததில் 61 தொழிலாளர்கள் பலியானார்கள். மற்றொரு 11 மாடி கட்டிடத்தை ஆய்வு செய்த போது அதுவும் பலமானதாக இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். கட்டிடத்தை வெடிமருந்து வைத்து இடிக்கும் பணி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கான பணியில் அந்நிறுவனத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர். கட்டிடத்தில் இருந்து பொருட்களை அகற்றிவிட்டு தூண்களில் வெடிமருந்தை வைக்க துளைகள் போட்டனர்.

இந்த பணிகளை ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் ஏற்பட்ட விரிசல்களையும் பார்வையிட்டு கணக்கெடுத்தனர். 11 மாடி கட்டிடம் வெடிமருந்து மூலம் நாளை இடிக்கப்படும் என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று காலை 2 மினி வேன்களில் வெடிமருந்துகள் கொண்டு வரப்பட்டது. கட்டிடத்தை சுற்றிலும் 100 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர்கள் மவுலிவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கட்டிடம் இடிக்கும் போது அம்பத்தூர் துணை கமி‌ஷனர் சுதாகர் தலைமையில் பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் 11 மாடி கட்டிடம் தகர்க்கும் பணி நாளை நடைபெறவில்லை என்றும் அப்பணி தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான காரணத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. சி.எம்.டி.ஏ. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்த பிறகே தள்ளி வைப்புக்கான காரணம் தெரியவரும். கட்டிடம் தகர்க்கும் பணி தள்ளி வைக்கப்பட்டதால் 2 மினி வேனில் கொண்டு வரப்பட்ட வெடி மருந்துகள் திருப்பி கொண்டு செல்லப்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds