feddral bank
BREAKING NEWS

சமூக நீதி”யின் குரல்வளையை நெரிக்கும் தமிழக அரசு : கருணாநிதி

பதிவு செய்த நாள்: 03 Jan 2014 5:52 pm
By :

சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் அமைந்த தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் நியமனத்துக்காக அரசு விடுத்துள்ள அறிவிப்பை பார்க்கும் போது சமூக நீதிக் கொள்கைக்கு மீண்டும் ஒரு சோதனை எற்பட்டிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் அமைந்த தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவமனைக்கு அதிகாரிகளையும், டாக்டர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை தான் 27-12-2013 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே, தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுகின்ற காரணத்தால், தற்போது அங்கே நியமிக்கப்படவுள்ள அதிகாரிகளுக்கும், டாக்டர்களுக்கும் சம்பளத்தையும் மிக அதிக அளவிலே அறிவித்திருக்கிறார்கள்.

அதில், இயக்குர் பதவிக்கான மாதாந்திர சம்பளம் எவ்வளவு தெரியுமா? இரண்டரை இலட்சம் ரூபாய். தலைமைச் செயலாளருக்குக் கூட, ஏன் முதல் அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கூட இந்த அளவிற்கு சம்பளம் இருக்குமா என்று தெரியவில்லை! மூத்த மருத்துவ ஆலோசகர் என்று 14 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக்கான ஊதியம், தலா ஒன்றரை இலட்சம் ரூபாய். இணை மருத்துவ ஆலோசகர் என்று 13 பேரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம். என்ன சம்பளம் தெரியுமா? ஒருவருக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்! இளநிலை ஆலோசகர்கள் என்று 23 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக்கெல்லாம் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம். பதிவாளர் என்று 14 பேர், மாதாந்திர ஊதியம் 70 ஆயிரம் ரூபாய். நிலைய மருத்துவர் என்று 19 பேர், மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம். மேலும் இந்தப் பதவிகளுக்கெல்லாம்“இட ஒதுக்கீடு” கிடையாது. ஊதியம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு என்று குறிப்பிட்டுள்ள அடுத்த வரியிலேயே அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று கல்வி மற்றும் சமூக நிலைகளில் பிற்படுத்தப்பட்டோரையும், மிகப் பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் முன்னேறிய வகுப்பினரைப் போலவே கருதி, நிர்ணயித்துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதுமாகும்.

தற்போது இந்த சிறப்பு மருத்துவ மனைக்கு அதிகாரிகளையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கின்ற நேரத்தில், இட ஒதுக்கீடு கிடையாது என்று ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை “சமூக நீதி”யின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அ.தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் அபாயத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட இளவல் கி. வீரமணி போராட்டக் களங்களை உருவாக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது; தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது என்று கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds